சென்னை: இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, மதிமுக சார்பில் 13.15 லட்சம், ஜிஆர்டி ஜூவல்லரி நிறுவனத்தின் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
மதிமுக: இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நிதியுதவி வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, முதல்வரை சந்தித்து, ரூ.13.15 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
ஜிஆர்டி ஜூவல்லரி: இதேபோல், ஜி.ஆர்.டி ஜூவல்லரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஜி.ஆர் அனந்த பத்மநாபன், ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்வரைச் சந்தித்து, ரூ.50 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் இயன்ற உதவியினை செய்ய வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்வதாகவும், பொதுமக்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். முதற்கட்டமாக தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.