திருச்சி: கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெயிலால் அவதிப்பட்ட மக்களையும், வெப்பத்தால் கனன்று கொண்டிருந்த மண்ணையும் குளிர்விக்கும் வகையில் நேற்று மாலை திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் அண்மையில் அறிவித்திருந்தது. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது. மிதமாக தொடங்கி பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் திருச்சி மாநகரில் சில இடங்களில் மரங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டது.
சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்கப் பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மழை நின்ற பிறகு மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் வருவதும், தடைபடுவதாகவும் இருந்தது. இரவு 11 மணிக்குப் பிறகே சீரான மின்சாரம் விநியோகம் இருந்தது. இந்த மழை காரணமாக வெப்பம் முழுமையாக குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜங்சன் பகுதியில் 49 மில்லி மீட்டர், இதற்கடுத்து திருச்சி நகரில் 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: மணப்பாறை 41.60, நவலூர் குட்டப்பட்டு 40.20, சமயபுரம் 34.20, தேவிமங்கலம் 29.40, துறையூர் 26, பொன்மலை 24.60, பொன்னணியாறு அணை 23.80, கோவில்பட்டி 21.20, புலிவலம், கொப்பம்பட்டி தலா 20, விமான நிலையம் 17.40, தென்பரநாடு 17, மருங்காபுரி 16.20, வாத்தலை அணைக்கட்டு 10.60, தாத்தையங்கார்பேட்டை10, சிறுகுடி 7, முசிறி 6, லால்குடி 4.20, துவாக்குடி 1.20.