சென்னை: வட சென்னையில் ரூ.298 கோடி செலவில் புதிய கழிவு நீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
வட சென்னை பகுதியில் உள்ள கழிவு நீர் குழாய்கள் பல ஆண்டுகள் முன்பு அமைக்கப்பட்ட காரணத்தால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் ஓடும் நிலையில் உள்ளது. எனவே வட சென்னையில் கழிவு நீர் கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ராயபுரம் தொகுதியில் புதிய கழிவுநீர் குழாய்கள் பாதிக்கப்படுமா? என சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, "வடசென்னை முழுவதும் பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி புதிய கழிவுநீர் குழாய்களைப் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.298 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும்" என்று தெரிவித்தார்.