தமிழகம்

மதுரை எய்ம்ஸ்-க்கு ஜப்பான் நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு: விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என தகவல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மொத்த திட்ட மதிப்பீட்டில் ரூ.1,977 கோடியில் ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. எனவே விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கிவிடும் என மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் இன்னும் மதுரையில் தொடங்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பல்வேறு போராட்டங்கள், தடைகளைக் கடந்து தோப்பூரில் அமைக்க பிரதமர் மோடி 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டினார். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கடன் வழங்குவதாக கூறிய ஜப்பான் ஜைக்கா நிறுவனம் தற்போது வரை அதனை வழங்கவில்லை. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி அண்டை மாவட்டமான ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களுடன் தொடங்கியிருக்கிறது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுவதற்காக 222 ஏக்கர் நிலம் மாநில அரசால் மத்திய சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டு அந்த நிலத்தில் 90 சதவீத சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளதோடு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆனால், கட்டிடம் இல்லாமல் எய்ம்ஸ்க்காக போடப்பட்ட சாலைகள் மட்டும் இன்னும் பளபளப்பாக காணப்படுகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இந்தியா ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்துடனான கடன் ஒப்பந்தம் 26.03.21 அன்று கையெழுத்திட்டுள்ளது. ஜைக்கா நிறுவனம் 82 சதவீத நிதியை வழங்கும். மீதமுள்ள 18 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது.

வெளிநாட்டு நிதி உதவியுடன் மதுரை எய்ம்ஸ் செயல்படுத்தப்படுவதால் நிதி ஆதாரத்திற்கு எந்த பிரச்சினையும் இருக்காது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. தற்போது அதுவே பிரச்சனையாகி கட்டுமானப்பணிக்கு நிதி ஒதுக்காமல் திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலை ஏற்பட்டது. நாடு முழுவதும் எய்ம்ஸ் திட்டத்திற்கு மத்திய அரசே நேரடியாக நிதி ஒதுக்கிய நிலையில் மதுரைக்கு மட்டும் ஏன் வெளிநாட்டு நிறுவனத்திடம் கடன் கேட்க வேண்டும் என்று இதற்கு முன்பிருந்த அதிமுக அரசும், தற்போதுள்ள திமுக அரசும் கேள்வி கேட்காமல் இருக்கும் நிலையில் மதுரை மக்கள் பிரதிநிநிதிகள் மத்திய, மாநில அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுத்து விரைவில் கட்டுமானப்பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மதுரை எம்பி சு.வெங்கடேசன்

இது குறித்து மதுரை மக்களவை எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது: "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தொடர்ந்து மக்களவையில் குரல் கொடுத்து வருகிறேன். அதன் ஒவ்வொரு கட்ட நகர்வுக்கு பெரும் முயற்சி செய்து வருகின்றேன். அந்த அடிப்படையில் மக்களவையில் விதி எண் 377-ன் படி மதுரை எய்ம்ஸ் பற்றி முழுவிவரங்கள் தரும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டிருந்தேன்.

தற்போது முழு விவரத்தையும் குடுப நலத்துறை சுகாதாரத்துறை செயலர் கொடுத்துள்ளார். அதில், முன் முதலீட்டு பணிகள் 92 முடிந்து இருக்கிறது. மொத்த திட்ட மதிப்பீட்டில் ரூ.1,977 கோடியில் ஜைக்கா நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. மீதி நிதியை வரும் அக்டோபர் 26ம் தேதிக்குள் வழங்கிவிடுவதாக கூறப்பட்டுள்ளது. அதனால், விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கிவிடும்" என எம்பி வெங்கடேசன் கூறினார்.

SCROLL FOR NEXT