தமிழகம்

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பாமக வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல்: அரூரில் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டப்பேரவை தொகுதியில் பாமக சார்பில் முரளி (29) போட்டியிடுகிறார். கடந்த 5-ம் தேதி, இவரது அலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அரூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முரளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கு வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல், முரளியிடம் சென்று, அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்தனர். இதற்கு கணிசமான தொகை வழங்க வேண்டும் எனக் கேட்டனர்.

ஆனால் இதற்கு முரளி ஒப்புக் கொள்ளவில்லை. ஆத்திரமடைந்த கும்பல், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த முரளி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். போலீஸார் அவர்களை பிடிக்க முயன்ற போது 2 பேர் மட்டும் சிக்கினர். விசாரணையில் அவர்கள் நாகசமுத்திரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (23), மாருவாடியைச் சேர்ந்த மருதுபாண்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸார், தப்பியோடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பாமக வேட்பாளர் சத்திய மூர்த்தி (42) பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட போது, அதே பகுதியைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் செருப்பைக் காட்டி மிரட்டல் விடுத்தபடி ஆபாசமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் சத்தியமூர்த்தி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்களால் பாமகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT