தமிழகம்

‘சின்னக் கலைவாணர் விவேக்’ சாலை பெயர்ப் பலகை திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மனைவி அருட்செல்வி, மகள் அமிர்தாநந்தினி, விவேக் பசுமை கலாம் இயக்க நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, விவேக் வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, முதல்வர் உத்தரவின்படி, சில தினங்களுக்கு முன் விவேக் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ பெயர்ப் பலகையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், விருகம்பாக்கம் எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விவேக் எனது நீண்டல நண்பர். பசுமை சைதை திட்டத்தின்கீழ் இதுவரை 98 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

சைதையில் ஒரு லட்சமாவது மரக்கன்றை நடும்போது, அதற்கு விவேக் பெயரைச் சூட்டுவேன். முதல்வர் ஸ்டாலினும் விவேக் மீது பாசம் கொண்டவர். சென்னையில் ஒரு சாலைக்கு பெயர் வைக்க நிறைய வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.

எனினும், விவேக் மனைவி கோரிக்கை வைத்தவுடன், அதை நிறைவேற்றி, அரசாணை வெளியிடச் செய்தார் முதல்வர்.

ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் இருந்தது. தினமும் 61,441 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். விவேக் மறைவதற்கு 2 நாட்களுக்கு முன் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டது. தற்போது 10.83 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனால்தான் தமிழகத்தில் 88 சதவீதம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்திருக்கிறது.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், வரும் 8-ம் தேதி நடைபெறும் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் எந்தவிதமான நோயையும் வெல்லலாம்” என்றார்.

SCROLL FOR NEXT