தமிழகம்

புற்றீசல் போல பெருகி வரும் மசாஜ், ஸ்பா சென்டர்கள் - சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் ஆய்வாளர்கள் வழக்கு பதிய அதிகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: புற்றீசல் போல பெருகி வரும் மசாஜ், ஸ்பா மற்றும் ப்யூட்டி பார்லர் உரிமையாளர்கள், சட்டவிரோதக் காரியங்களில் ஈடுபட்டால்வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அந்தந்த சரக காவல் ஆய்வாளர்களுக்கும் அதிகாரம் உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மசாஜ், ஸ்பா நிறுவனத்தில் அண்ணா நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கடந்த 2020 செப்.11-ம் தேதி சோதனை நடத்தினார். அப்போது மணிப்பூர் இளம்பெண் ஒருவரை அந்த ஸ்பா நிறுவனம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அப்பெண்ணை மீட்ட அண்ணா நகர் போலீஸார் பாலியல் தொழில் தடுப்பு சட்டத்தின் கீழ் ஸ்பா உரிமையாளர்களான ஹேமா ஜூவாலினி, ஹேமா சவுத்ரி உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்துசெய்யுமாறு ஸ்பா உரிமையாளர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நடந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், “பாலியல் தொழில் தடுப்பு சட்டத்தின் கீழ்,மசாஜ், ஸ்பா சென்டர்களில் சோதனை செய்ய சிறப்பு காவல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அந்தந்த உள்ளூர் போலீஸார் சோதனை நடத்த முடியாது. மசாஜ் மற்றும் ஸ்பா நிறுவனங்களின் தொழில் உரிமையில் போலீஸார் அடிக்கடி தலையிட்டு தொந்தரவு செய்ய முடியாது என்பதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிடும்போது, “மனுதாரர்களுக்கு சொந்தமான அண்ணா நகர் ஸ்பாவில் மணிப்பூர் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததை போலீஸார் ஆதாரப்பூர்வமாக கையும், களவுமாக பிடித்துள்ளனர். சென்னையில் உள்ள ஸ்பாநிறுவனங்கள் இந்தப் பெண்ணை மீண்டும்மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவருவதை பாதிக்கப்பட்ட பெண்ணே ஒப்புதல் வாக்குமூலமாகவும் அளித்துள்ளார்.

தமிழக அரசின் சமூகநலத் துறை கடந்த 13.4.1987-ம் ஆண்டு பிறப்பித்துள்ள அரசாணைப்படி பாலியல் தொழில் தடுப்புசட்டத்தின்படி ஒவ்வொரு காவல் ஆய்வாளரும் சிறப்பு அதிகாரியே. இதனால் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், ஸ்பா, மசாஜ் மற்றும் ப்யூட்டி பார்லர்களி்ல் சோதனை செய்யவும் அந்தந்த சரக காவல் ஆய்வாளர்களுக்கும் முழு அதிகாரம் உள்ளது” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்துள்ள உத்தரவு: புற்றீசல் போல பெருகி வரும்மசாஜ், ஸ்பா மற்றும் ப்யூட்டி பார்லர்களின் உரிமையாளர்கள், இளம்பெண்களை, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் அதைத் தடுத்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அந்தந்த சரக காவல் ஆய்வாளர்களுக்கும் அதிகாரம் உண்டு. எனவே இதில் எந்தவொரு சட்ட விதிமீறலும் இல்லை. மேலும் இந்த வழக்குவிசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை ரத்து செய்ய முடியாது. இவ்வாறு மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

SCROLL FOR NEXT