தமிழகம்

முதுமலையில் அதிகரிக்கும் பிணந்தின்னிக் கழுகுகள்: பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

மசினகுடி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சீகூர் சரகத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவற்றின் வாழ்விடத்தை பாதுகாப்பு மண்டலமாக வனத்துறை அறிவிக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொள்ளை நோய்களில் இருந்துகாடுகளைக் காக்கும் காவலனாகஆய்வாளர்களால் அறியப்படும் பிணந்தின்னிக் கழுகுகள் அழிவின்விளிம்பில் இருக்கும் பறவையினமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் காணப்படும் 9 வகையான பிணந்தின்னிக் கழுகுகளில் வெண்முதுகு, கருங்கழுத்து, செந்தலை, மஞ்சள் முகம் ஆகிய 4 வகையான கழுகுகள் தென்னிந்தியக் காடுகளை வாழ்விடமாகக் கொண்டிருக்கின்றன. பிணந்தின்னிக் கழுகுகளின் கடைசி புகலிடமாக அறியப்படும் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்திலேயே இவற்றின் எண்ணிக்கை ஒற்றை மற்றும் இரட்டை இலக்கத்தில் மட்டுமே தற்போது இருப்பதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அரசும், தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வெண்முதுகு உட்பட ஒருசில பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதை பறவைகள் ஆர்வலர்கள் ஆய்வுகள் மூலம்கண்டறிந்து நம்பிக்கை அடைந்துள்ளனர். இந்த நிலையில், முதுமலைபுலிகள் காப்பகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பிணந்தின்னிக் கழுகுகள் கூட்டமாகத் தென்படுகின்றன. இது ஆய்வாளர்கள் மற்றும் வனத்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பிணந்தின்னி கழுகுகள் குறித்து கள ஆய்வில் ஈடுபட்டு வரும்ஆய்வாளர்கள் கூறும் போது, ‘முதுமலையில் சமீபத்திய கணக்கெடுப்புகளின் அடிப்படையில் வெண்முதுகு - 110, கருங்கழுத்து - 11, செந்தலை - 5, மஞ்சள் முகம் – 2 இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இனப்பெருக்கக் காலத்தில் 14 வெண்முதுகு பிணந்தின்னிக் குஞ்சுகளும், 4 கருங்கழுத்து பிணந்தின்னிக் குஞ்சுகளும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கிறது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இனப்பெருக்கக் காலம் முடிந்துவிட்டதால், குஞ்சுகள் சிறகடிக்க ஆரம்பித்துள்ளன.முதுமலையில் போதுமான இரையும் தற்போது கிடைத்து வருவதால் 40, 50 எனக் கூட்டமாக இவற்றைப் பார்க்க முடிகிறது’ என்றனர்

நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் சமூக அறக்கட்டளை நிறுவனர் சிவதாஸ் கூறும் போது, ‘பிணந்தின்னிக் கழுகுகளின் கூடுகள் இருக்கும் பகுதியைச் சுற்றி இருக்கும் 100 கிலோமீட்டர் பரப்பளவை பிணந்தின்னி கழுகுகள் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தால் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அழிவிலிருந்தும் பாதுகாக்க முடியும். இப்படி அறிவித்தால் கழுகுகளுக்குபாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களின் பயன்பாடு குறையும், அத்தகைய ரசாயனங்களுக்கு தடையும் விதிக்க முடியும்’ என்றார்.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநரும் நீலகிரி மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான டி.வெங்கடேஷ், ‘புலிகள் காப்பகமாக இருப்பதால் கழுகுகளுக்கும் பாதுகாப்பான பகுதியாகவே இருக்கிறது. கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார்.

SCROLL FOR NEXT