தமிழகம்

நடிகர் ரஜினி சரியான நேரத்தில் சரியான கருத்தைத் தெரிவிப்பார்: பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

டி.செல்வகுமார்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அத்தொகுதியின் பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் “தி இந்து” நிருபருக்கு தொலைபேசியில் அளித்த சிறப்புப் பேட்டி:-

உங்கள் கட்சி நிர்வாகக் குழு வில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலில் ஒரு பெண் வேட்பாளர்கூட இடம்பெறாததற்கு காரணம் என்ன?

பாஜகவைப் பொருத்தவரை மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக உள்ள நிலவரம் குறித்து கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்வோம். வேட்பாளர் தேர்வில், அகில இந்திய தலைமையின் முடிவே இறுதியானது. தமிழ கத்தில் முதன்முறையாக பாஜக தலைமையில் கூட்டணி அமைத்துள்ளோம். புதிய கூட் டணி அமைக்கும்போது ஏற்படும் பிரச்சினைகள் ஏராளம். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைப் பெண்களுக்கு தரலாம். அதில் தவறு இல்லை. ஆனால், அதற் கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

மத்திய அரசு கல்வி உதவித் தொகை கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதுபோல இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று நீங்கள் போராடி வருகிறீர்களே?

தகுதியுள்ள அனைத்து ஏழை மாணவ, மாணவிகளுக்கும் பா ரபட்சம் இல்லாமல் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். பாஜக ஆட்சிக்கு வந்ததும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாஜக கூட்டணியை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுபோல நீங்கள் வேண்டுகோள் விடுப்பீர்களா?

திரைத்துறையைத் தாண்டி ரஜினிகாந்த் உன்னதமான மனிதர். அவர் ஒரு தேசியவாதி. நாட்டு நலனில் மிகவும் அக்கறையுள்ள அவர் சரியான நேரத்தில் தனது கருத்தைத் தெரிவிப்பார்.

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய உறவு இருக் கிறது என்றும் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் அதிமுக போய்ச் சேர்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு உங்கள் கூட்டணியில் இருப்பவர்களை அரவணைத்துச் செல்வீர்களா?

பாஜக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக மற்ற தலைவர்கள் செய்யும் முயற்சியே இது. நீங்கள் சொல்வதைப் போன்ற நிலை ஒருபோதும் ஏற்படாது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். கூட்டணி கட்சிகளை இப்போதுபோல எப்போதும் அரவணைத்துச் செல்வோம்.

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன வென்று நினைக்கிறீர்கள்?

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு அந்த நாட்டு அதிபர் ராஜபக்சே கையில்தான் உள்ளது. தங்களது உரிமையைப் பாதுகாக்கக் கோரி கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவை அணுகியபோது, 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து வங்கதேசத்தைப் பெற்றுக் கொடுத்தது.

அதுபோல, இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொடுமைப் படுத்தப்பட்டால், அவர்களது உரிமை மறுக்கப்பட்டால், வேறுவழியில்லாமல் தனிஈழம் வேண்டுமென கோரி அவர்கள் இந்தியாவை நாடினால், வங்கதேசம் போல இலங்கையிலும் நடந்தால் அதில் எந்தத் தவறும் இல்லை.

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களின் உரிமைகள் மீட்கப் படுமா?

நரேந்திரமோடி பிரதமர் ஆகிவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும், இலங்கை அதிபர் ராஜபக்சே அரசு தன்னை அடக்கிக் கொள்ளும். தமிழக மீனவர்களின் உரிமைகள் தக்க வைக்கப்படும்.

பாஜக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பு உள்ளது?

எங்கள் கூட்டணிக்கு மக்கள் அமோக வரவேற்பு அளிக்கிறார்கள். இத்தேர்தலில் இக்கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

SCROLL FOR NEXT