தமிழகம்

அன்புநாதனிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

கரூர் அருகே அன்புநாதனிடம் இருந்து கோடிக்கணக்கில் பறி முதல் செய்யப்பட்ட பணம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த அரசகாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சி யினரின் கைப்பாவைகளாக செயல் படுகின்றனர். அவர்களால் நேர்மை யாக பணிபுரிய முடியவில்லை.

வாக்காளர்களுக்கு கொடுப் பதற்காக கோடிக்கணக்கான பணம் ஆளுங்கட்சியினரால் ஆங்காங்கே பதுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 22-ல் கரூர் அருகே அன்புநாதன் என்பவரது கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10.3 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை யினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அங்கிருந்து பணம் எண் ணும் மெஷின்கள், 4 கார்கள், டிராக்டர் மற்றும் ரகசிய அறை கொண்ட ஆம்புலன்ஸ் ஆகிய வற்றையும் அதிகாரிகள் கைப் பற்றியுள்ளனர். ஆனால் இந்த கிடங்கில் ரூ.250 முதல் ரூ.500 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

ஏனெனில் பணம் எண்ணும் மெஷின்களே அங்கு 12 இருந் துள்ளன. ரூ.10 லட்சத்தை எண்ணு வதற்கு இத்தனை மெஷின்கள் தேவையில்லை. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அன்புநாத னின் வீட்டில் இருந்தும் ரூ.4.77 கோடியை பறிமுதல் செய்து உள்ளனர்.

இதுபோல சென்னை எழும் பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அதிகாரிகள் ரூ.4.72 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு இந்த தொகை குறித்தும், அதை பதுக்கியவர்கள் மீதும் தேர்தல் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தாது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட உண் மைக் குற்றவாளிகளை கண்டு பிடித்தால்தான் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்படும்.

இதுகுறித்து சிபிஐ போன்ற சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத் துக்கு மனு கொடுத்தேன். ஆனால் தேர்தல் ஆணையம், “ஆதாரமில் லாத குற்றச்சாட்டை கூறக் கூடாது” என பதில் அளித்துள்ளது. இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.விமலா அடங்கிய அமர்வு, “மனுதாரர் ஒரு அரசியல் கட்சியின் பிரமுகராக உள்ளார். சட்டவிரோத பணம் குறித்து தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சிபிஐ போன்ற சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து விசாரிக்கும் அளவுக்கு இந்த மனு உகந்தது அல்ல” எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT