காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் உள்ள பொருட்களை ஆய்வு செய்கிறார் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி. 
தமிழகம்

6,976 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் நெல் கொள்முதல் மையங்களில் ஆய்வு செய்தார்.

இவர் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுகாவேரிப்பாக்கம், கீழம்பி ரேஷன் கடைகள் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கு தாமல், விஷார் நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,000 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் வட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 10 ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவர்.

தரமான பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதை ஆய்வு செய்ய கூட்டுறவுத் துறைஇணைப் பதிவாளர், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுகாவல் அலுவலர் ஆகியோரைக் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஆய்வு செய்த பின்னர் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படும். ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 286 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகள் ரூ.96 கோடி செலவில் புனரமைக்கப்படும். சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகள் ரூ.2.5 கோடி செலவில் புனரமைக்கப்படும். அனைத்து ரேஷன் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800முதல் 3 ஆயிரம் குடும்ப அட்டை கடைகளைக் கொண்ட ரேஷன் கடைகளை பிரித்து புதிய கடைகள் உருவாக்கப்படும். 6,976 வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளை சொந்த கட்டிடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திமுக அரசு பொறுப்பேற்ற 11மாதங்களில் 11 லட்சம் புதியரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 31 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சன்னரக நெல் குவின்டாலுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு ரூ.1,960-ல் இருந்து ரூ.2,060 ஆக வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது ரக நெல் குவின்டாலுக்கு ரூ.75 உயர்த்தப்பட்டு ரூ.1,945-ல் இருந்து ரூ.2,020 ஆக வழங்கப்பட்டு வருகிறது.

நெல் கொள்முதல் செய்யப்படும்போது கூலித் தொழிலாளர்களுக்கு சுமைக்கூலி மூட்டைக்கு ரூ.3.25-லிருந்து ரூ.10 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 500 மெட்ரிக் டன் நவீன அரிசி ஆலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் உணவுத் துறை வழங்கல் மற்றும் நுகர்வோர் ஆணையர் க.ராஜாராமன், மாவட்டஆட்சியர் மா.ஆர்த்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.பிரபாகர், மக்களவை உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் லட்சுமி, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல இயக்குநர் சத்தியவதி உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT