திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் உலாவரும் ஒற்றை காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட கும்கி யானைகள் டாப்சிலிப்பில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி கன்னிவாடி வனச் சரகத்துக் குட்பட்ட பன்றிமலை, ஆடலூர், சோலைக்காடு, அழகுமடை பகுதியில் ஒற்றை காட்டுயானை கடந்த சில தினங்களாக வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
தருமத்துப்பட்டி-ஆடலூர் மலைச்சாலை, விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே வந்து செல்வதால் மலைகிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். தனது கூட்டத்தைவிட்டுப் பிரிந்து திரியும் யானையைக் கூட்டத்தில் சேர்க்கவும், மேலும் யானைக் கூட்டத்தை அப்பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வும் வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம், சின்னத்தம்பி ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபு கூறுகையில், கும்கி யானை களுடன் வந்த பாகன் உள்ளிட்ட 10 பேர், திண்டுக்கல் மாவட்ட வனத்துறை ஊழியர்கள் 15 பேர், கொடைக்கானல் வன மாவட்டத்தில் இருந்து 10 பேர் என 35 பேர் அடங்கிய குழுவினர் ஒற்றை யானை, யானைகள் கூட்டத்தை இரண்டு கும்கி யானைகளை கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.