கேரள சட்டக் கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை தனியார் கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே சில தினங்களுக்கு முன்னர் சட்டக்கல்லூரி மாணவி, வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதைக் கண்டித்து, கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் இந்தியன் அறக்கட்டளை என்ற அமைப்பு பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளைத் திரட்டி நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது.
உயிரிழந்த மாணவியின் உருவப் படத்துக்கு நிகழ்ச்சியின்போது, மலர் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது, அந்த அமைப்பினர் கூறும்போது, "புதுடெல்லியில் நிருபயா வன்கொடுமை சம்பவத்துக்கு பின்னராவது இது போன்ற குற்றச் சம்பவங்கள் குறையும் என எதிர்பார்த்தோம். ஆனால், குறையவில்லை. சட்டமும், தண்டனையும் இருந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தபடிதான் உள்ளன.
தொலைக்காட்சிகளில் பெண்களை காட்டும் விதமும், ஆண்கள் அதிகம் பேர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதும்தான் இதுபோன்ற குற்றச் சம்பவங்களுக்கு காரணம்" என்றனர்.