சென்னை: நாளை அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் நகைக் கடைகள் அதிகாலை 4.30 மணி முதல் நள்ளிரவு வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தஆண்டு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்துக்கு பொதுமக்கள் மத்தியில் எப்போதும் ஓரு ஈர்ப்புஉள்ளது. ஆபரணத் தங்கமாக உடலில் அணியும்போது அழகுசேர்ப்பதோடு, அவசரத் தேவைக்கு அடமானம் வைத்து உடனடியாக பணமும் பெற முடிகிறது. இதனால், பொதுமக்கள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.
இந்நிலையில், நாளை (3-ம்தேதி) அட்சய திருதியை நாளில்தங்கம் வாங்கினால், தங்களது செல்வம் பெருகும் என நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதனால், தங்கம் வாங்க அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்காக, கடந்த ஒருவாரத்துக்கு முன்பாகவே நகை வாங்க முன்பதிவு செய்து வருகின்றனர். மேலும், நகைக் கடைகளும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன.
தங்கத்தில் முதலீடு
கரோனா தொற்று காரணமாக, கடந்த 2020, 21-ம் ஆண்டுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், அந்த சமயத்தில் அட்சயதிருதிக்கு நகைக் கடைகள் செயல்படவில்லை. இதனால், வியாபாரம் வெகுவாகக் குறைந்தது. சில நகைக் கடைகள் மட்டும் இணையதளம் மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு நகைகளை விற்பனை செய்தன.
தற்போது ரஷ்யா - உக்ரைன்இடையே போர் ஏற்பட்டதையடுத்து, உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்புக் கருதி தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால், தங்கம் விலை அதிகரித்தது. கடந்தபிப்ரவரி, மார்ச் மாதத்தில் ஒருபவுன் ரூ.40 ஆயிரத்தைத் தாண்டியது.
இந்நிலையில், இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் தங்கம்விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைரவியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
கரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை குறைந்த அளவே இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை விற்பனை அதிகரிக்கும் என கருதுகிறோம்.
அட்சய திருதியை தினத்தன்று, வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு வரை நகைக் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஜெயந்திலால் சலானி கூறினார்.