சென்னை: தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதை உளவுப் பிரிவு போலீஸாரும் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, கஞ்சா கும்பலை ஒழிக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் ஆங்காங்கே கஞ்சா கடத்தல், விற்பனை, பதுக்கல் நடைபெற்று வருகிறது.
ஆந்திராவிலிருந்து கடத்தல்
தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க 2.0 என்ற பெயரில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட நடவடிக்கையில் கடந்த ஒரு மாதத்தில் 2,423 கஞ்சா வியாபாரிகள், 6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா, 44.9 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு அதிக அளவு கஞ்சா கடத்தப்படுகிறது. போலீஸாரின் கெடுபிடி அதிக அளவு இருப்பதால் தற்போது ஒடிசா உள்ளிட்ட வேறு சில மாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு கஞ்சா கடத்திவரப்படுவது அதிகரித்துள்ளது. முக்கியமாக ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலத்திலிருந்து முகவர்களால் கொள்முதல் செய்யப்படும் கஞ்சா, பக்குவமாக பேக்கிங் செய்யப்பட்டு, இரும்பு டிரங்க் பெட்டிகளில் பார்சல் செய்யப்பட்டு, வேலை தேடி தமிழகத்துக்கு வரும் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ரயில்களில் கடத்தல்
பின்னர் அவை, ரயில்களில் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. தொழிலாளர்களின் துணிமணி உடமைகள் போன்று இவை கடத்தப்படுவதால் போலீஸார் சந்தேகிப்பதில்லை. மேலும், ரயில்களில் தினமும் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உடமைகளை, டிரங்க் பெட்டிகளைத் திறந்து சோதனைநடத்துவதும் ரயில்வே போலீஸாருக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. இது, கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. சில நேரங்களில் கஞ்சா பெட்டிகள் சிக்கினாலும், அதை யாரும் உரிமை கொண்டாடாமல் விட்டுவிட்டு தொழிலாளர்கள் தப்பிவிடுகின்றனர்.
ரயில்கள் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கிரானைட் கற்கள், மளிகை, உணவுப்பொருட்கள், சிமென்ட் போன்ற சரக்குகளை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் பேருந்துகள் மூலமாகவும் கஞ்சா கடத்தி வரப்படுகிறது. ஓட்டுநர், கிளீனர் துணையுடன் இவ்வகை சரக்கு வாகனங்களில் பல்லாயிரக்கணக்கான கிலோ கஞ்சா தமிழகத்துக்குள் நுழைந்து விடுகிறது. இதேபோல், ஆன்லைன் வழியாகவும், கூரியர் மூலமும் கஞ்சா விற்பனை, கடத்தல் நடைபெறுகிறது. இலங்கையிலிருந்தும் தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேனி உள்ளிட்ட சில மலைப்பிரதேச பகுதிகளிலும் சட்ட விரோதமாக கஞ்சா பயிரிடப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நெட்வொர்க்கை உடைக்க தற்போது தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.
பவுடர் வகை போதைப்பொருட்கள்
இதுகுறித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறியதாவது: வடமாநிலங்களிலிருந்து ஒரு கிலோ கஞ்சாவை, சுமார் 250 ரூபாய்க்கு வாங்கும் முகவர்கள், போலீஸ் கண்காணிப்பை மீறி கடத்தி வந்து, தமிழகத்தில் கிலோ, 25 ஆயிரம் ரூபாய் வரை விலை வைத்து விற்கின்றனர். சில்லறை வியாபாரிகள் இதை வாங்கிஒரு கிராம், இரண்டு கிராம் பொட்டலம் போட்டு மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சப்ளை செய்கின்றனர்.
குறிப்பாக மாணவர்கள், ஐ.டி ஊழியர்களுக்கு அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. தற்போது மாணவர்களும், இளைஞர்களும் கஞ்சா பழக்கத்துக்கு அதிக அளவில் அடிமையாகி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் வெளிப்பாடே மாணவர்கள் மோதிக் கொள்வது, ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபடுவது போன்றவிரும்பத் தகாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
கஞ்சா மட்டும் அல்லாமல் தற்போது உடல் வலி நிவாரண மாத்திரைகள், போதை ஊசிகளும் போதைக்காக பயன்படுத்தப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அண்மைக்காலமாக செல்வந்தர்கள், வசதி படைத்த மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்களை குறி வைத்து அபின் போன்ற பவுடர் வகை போதைப் பொருட்கள் புழக்கத்தில் விடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடக்கத்தில் போதை பவுடர்களை கொஞ்சம், கொஞ்சமாக தொடர்ந்து பயன்படுத்த வைத்து விட்டு பின்னர் அதை கொடுக்காமல் அவர்களை கெஞ்ச விட்டு பின்னர் அந்த போதைப் பவுடர்களுக்காக இளம் பெண்களை கட்டாயமாக பாலியல்தொழிலில் ஈடுபடுத்தும் நிகழ்வு நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெறும் இதுபோன்ற சட்ட விரோத செயல்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அண்டை மாநில போலீஸாருக்கு கடிதம்
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, “கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை, பதுக்கலைத் தடுக்க ‘போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கை சென்னையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,போதைப் பொருள் கடத்தலை ஒருங்கிணைந்து தடுக்க ஆந்திரா, கர்நாடகா உட்பட பல வட மாநில போலீஸாருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் 2022 ஜனவரி 1 முதல் கடந்த மார்ச் 17-ம் தேதி வரை போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சென்னையில் 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 189 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
போதை இல்லா மாணவர் சமூகம்
தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறும்போது, “கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போதைப் பொருட்களை விற்பவர்களின் சொத்துகளை முடக்கி வருகிறோம்.
போதைப் பொருள் பதுக்கல் மற்றும் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போதைப் பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை, மனநல ஆலோசகரிடம் அனுப்பி இப்பழக்கத்திலிருந்து மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த 2.0 ஆபரேஷனில், ரயில்வே போலீஸாரின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். போதை இல்லா மாணவர் சமுதாயத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.
டாஸ்மாக்கையும் மூட வேண்டும்
மது ஒரு பொதுவான போதைப் பொருள். மதுவுக்கு அடுத்தபடியாக நிறைய பேரை பீடித்திருக்கும் போதை என்றால் அது கஞ்சாதான். எனவே, இந்த கஞ்சாவை ஒழிக்க போலீஸார் தொடர் முயற்சி எடுத்து வரும் நிலையில், அரசு டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடி போதை இல்லா சமூகத்தை அரசு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.