கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருபகுதியினர். படங்கள்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும்: பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கோவை: ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் உரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைவர் வி.ரத்னசபாபதி கூறியதாவது:

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் சகோதர அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வன்னியர் தனி ஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து மனுக்களை தாக்கல் செய்தன.

அதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, 32 ஆண்டுகளாக தொடர்ந்து இட ஒதுக்கீட்டு சலுகைகளை அனுபவித்த ஒரே சமுதாயத்துக்கு, அரசியல் சட்டத்துக்கு முரணாக, மீண்டும் ஒரு தனி இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம், அரசியல் காரணங்களுக்காக 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்தது. அதை ஏற்றுக்கொள்ளாமல் தமிழக அரசு நான்கு மேல்முறையீடுகளையும், பாமக, டாக்டர் ராமதாஸ், எம்எல்ஏ வேல்முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் ஒன்பதுக்கும் மேற்பட்ட மேல்முறையீடுகளையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இருப்பினும், எங்கள் பக்கமிருந்த நியாயத்தாலும், கூட்டமைப்பின் கடும் முயற்சியாலும், அரசியலமைப்புக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட எண்: 8/2021 ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நேர்மையான, வெளிப்படையான, கல்வி, அரசுப்பணி தரவுகளுடன் இணைந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு உடனடியாக நடத்த வேண்டும். இனி எந்த இடஒதுக்கீடும் அப்படி எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில்தான் கொடுக்கப்பட வேண்டும். மேலும், இத்தகைய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மட்டுமே தற்போது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை காத்திட முடியும்.

எங்கள் தரப்பின் நியாயங்களை, கோரிக்கைகளை எந்த ஒரு அமைச்சரோ, சட்டப்பேரவை உறுப்பினரோ, சட்டப்பேரவைக்கு உள்ளேயோ, வெளியிலோ பேச மறுத்து எங்களை புறக்கணிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களது அமைப்பின் பிரதிநிதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, எங்கள் தரப்பு நியாயங்கள், கோரிக்கைகளை கேட்குமாறும் வேண்டுகிறோம். அரசியல் சார்பற்ற, எங்களது சமுதாயப் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் பிற்படுத்தப்பட்டோர் உரிமை கண்காணிப்பு குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் தலைவர் வெள்ளியங்கிரி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் செயலாளர் பி.திருஞானசம்பந்தம், உடையார், பார்கவா சமுதாயத்தின் பிரதிநிதி ராஜேந்திரன், தேவாங்கர் சமுதாயத்தின் பிரதிநிதி சிவக்குமார், தமிழக நாயுடு பேரவை தலைவர் டி.குணசேகரன், தமிழக ரெட்டி நல சங்க மாநில செயலாளர் ஜனகராஜ் உட்பட 145 சமுதாயங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT