பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைக்கு சுற்றுலா வந்த இளைஞர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கோவை கணபதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் நேற்று ஆழியாறு அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான ஊட்டுக்கால்வாய் தண்ணீர் சேருமிடத்தில் அணையின் உள்ளே சென்று குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த ராமர் (21) தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட கணபதியை சேர்ந்த கல்லூரி மாணவன் நவீன்குமார் (19), அவரை காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்தினர், நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர தேடலுக்கு பிறகு இருவரின் சடலத்தையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆழியாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.