தமிழகம்

கோவை, திருப்பூரில் தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 340 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

செய்திப்பிரிவு

கோவை/திருப்பூர்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 340 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மே தினத்தன்று கோவை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா, தொழிலாளர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படும் நிலையில் உரிய முன் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், விதிமுறைகளை பின்பற்றாத 122 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 119 உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் 3 என மொத்தமாக 244 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்க்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பில்,“திருப்பூர் நகரம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை உள்ளிட்டபகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. விதிமுறைகளை பின்பற்றாத 96 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT