திமுக மாணவர் அணி சார்பில் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் குறித்த 2 நாள் தேசிய மாநாடு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் திமுக இளைஞர் அணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணி மாநிலச் செயலாளர் எழிலரசன், இணைச் செயலாளர் கோவி. செழியன், கேரள அமைச்சர் பி.ராஜு கலந்துகொண்டனர். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

பாஜக ஆளாத மாநில அரசுகள், கட்சிகள் நீட்டுக்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக ஆளாத மாநில அரசுகள் மற்றும் மாநில கட்சிகள் நீட் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஓரணியில் நிற்க வேண்டும் என்று திமுக இளைஞரணி மாநில செயலர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக மாணவர் அணி சார்பில் கல்வி, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் குறித்த 2 நாள் தேசிய மாநாடு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாணவர் அணி இணைச் செயலரும் அரசு கொறடாவுமான கோவி.செழியன் அனைவரையும் வரவேற்றார். மாணவர் அணி மாநில செயலர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையுரையாற்றினார். விழாவில் திமுக இளைஞரணி மாநில செயலர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:

மாணவி அனிதாவுக்கு நீட் தேர்வால் மருத்துவ இடம் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றம் சென்றும் அனிதாவுக்கு நீதி கிடைக்கவில்லை. சமூக நீதிக்கு எதிராக பாஜக, அதிமுக அரசுகள் சேர்ந்து செய்த படுகொலை. இதுவரை நீட் தேர்வால் 16 பேர் இறந்துள்ளனர்.

முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்துக்குள் நீட் நுழையவில்லை. அதன்பிறகு ஆட்சியில் இருந்த அதிமுகவால்தான் நீட் அமல்படுத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு தரும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருப்பது 7 கோடி மக்களை அவமதிக்கும் செயல்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதிக்கு எதிரானது. இதற்கு மாற்றாக புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு உருவாக்கி வருகிறது. பாஜக ஆளாத அனைத்து மாநில அரசுகளும், மாநில கட்சிகளும் பாஜகவின் இந்த நீட், புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதில் ஓரணியில் நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ” மத்திய அரசு நீட்டை வியாபாரமாக பார்க்கிறது. இதன்மூலம் அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடைக்கும். அந்த வரி எங்களுக்கு தேவையில்லை” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கேரள தொழில் துறை அமைச்சர் பி.ராஜூ, மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹிவா மொய்த்ரா, கேரள மாநில இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பி.சந்தோஷ்குமார், டெல்லி ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர் சோம்நாத் பாரதி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சசிகாந்த் செந்தில், கண்ணன் கோபிநாதன், காங்கிரஸ் நிர்வாகி கண்ணைய்யா குமார், மூத்த பத்திரிகையாளர்கள் திலீப் மண்டல், சீமா சிஷ்டி, வழக்கறிஞர் அ.அருள்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT