சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் ரூ.252 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54 கோடியே 89 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
இக்கடைகளில் வார நாட்களில் ரூ.90 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். வார இறுதி நாட்களில் இந்த விற்பனை இரண்டு மடங்கு அதிகரிக்கும்.
இந்தநிலையில், மே தினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. எனவே, மதுபானங்களை வாங்க டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று முன்தினம் பிற்பகல் 12 மணி முதலே மது அருந்துவோர் வரத் தொடங்கினர். அவர்கள் 2 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.
இதனால், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.252 கோடியே 34 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில், அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54 கோடியே 89 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, சென்னை மண்டலத்தில் ரூ.52 கோடியே 28 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.49 கோடியே 78 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.48 கோடியே 67 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.46 கோடியே 72 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.