மதுரை: மதுரை நகரில் இயக்கப்படும் குடிநீர் லாரிகள் தாறுமாறாகச் செல்வதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. மேலும், சரியான மூடிகள் இல்லாததால் சாலைகளில் செல்லும் மக்கள் மீது தண்ணீரை சிந்திச் செல்லும் அவலமும் தொடர்கிறது.
மதுரையில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இது தவிர, தனியார் லாரிகளும் குடிநீர் விற்பனைக்காக இயக்கப்படுன்றன. இந்த லாரிகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி அசுர வேகத்தில் செல்கின்றன. தண்ணீர் விநியோகிக்கும் நடைக்கு ஏற்ப பணம் கிடைப்பதால் லாரி ஓட்டுநர்கள் வேகமாகச் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது மதுரை நகரில் பல இடங்களில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
இதுதவிர, பெரிய டேங்கர் லாரிகளில் தண்ணீர் நிரப்பிச் செல்லும்போது டேங்கரின் மேல் பகுதியில் மூடியை முறையாக மூடாமல் திறந்த நிலையில் எடுத்துச் செல்கின்றனர். சாலைகளில் லாரிகள் செல்லும்போது தண்ணீர் அலம்பி அலை அலையாய் கீழே கொட்டுகின்றன. இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், நடந்து செல்வோர் மீது தண்ணீர் கொட்டி அவர்களது போன்று ஆடை முழுவதும் நனைந்துவிடுகின்றன.
கோச்சடை மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து ஏப்.29-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரியின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் மூடி இல்லை. இதனால், கோச்சடையில் இருந்து தண்ணீர் அலம்பி சாலைகளில் கொட்டிக்கொண்டே நகருக்குள் சென்றது. அப்போது வாகனங்களில் சென்றோர், நடந்து சென்றோர் மீது தண்ணீர் கொட்டியது. ஆனால், அந்த டேங்கர் லாரியின் ஓட்டுநர் அதைக் கண்டுகொள்ளாமல் லாரியை வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
எனவே, தண்ணீர் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளை, வட்டாரப் போக்குவரத்துத் துறையினர், போக்குவரத்துக் காவல் துறையினர், மாநகராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து வாகன ஓட்டுநர்களுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு இன்றி லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து போலீஸார் கூறுகையில், ‘‘நகரில் பொறுப்பற்ற முறையில் இயக்கப்படும் டேங்கர் லாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.