தமிழகம்

நாட்டுப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவப் பெண்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட நாட்டுப்படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, மீனவப் பெண்கள் தங்கச்சிமடத்தில் நேற்று கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீன்பிடித் தடைக் காலத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் மட்டும் கடலுக்குச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26 அன்று பாம்பனில் இருந்து கடலுக்குச் சென்ற சேசு இருதயம், பொங்கலாண்டி, சேவியர், ஆகிய மூவருக்குச் சொந்தமான நாட்டுப்படகுகளை தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி அதிலிருந்து 21 மீனவர்களை சிறைபிடித்தனர். அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2வது முறையாக காவல் நீட்டிப்பு

மீனவர்களின் காவல் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, 21 நாட்டுப் படகு மீனவர்களின் காவல் இரண்டாவது முறையாக மே 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நடைபெற உள்ள கும்பமேளாவில் கலந்துகொள்ள வரும் வெள்ளிக்கிழமை இந்தியா வரவுள்ள நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தங்கச்சிமடம் மீனவர்கள் இருந்தனர். ஆனால், மீனவர்களின் காவல் இரண்டாம் முறையாக நீட்டிக்கப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால், மீனவர்களின் குடும் பத்தினர் திடீரென தங்கச்சிமடம் கடற்கரையில் நேற்று பிற்பகலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மகிமை தாஸ் என்ற மீனவர் தீக்குளிக்க முயன்றார். அவரை சக மீனவர்கள் தடுத்து நிறுத்தினர். தேர்தலுக்குள் மீனவர் களை விடுதலை செய்யவில்லை என்றால், தங்கச்சிமடத்தில் மீனவர் கள் தேர்தலைப் புறக்கணிப்பார்கள் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

தங்கச்சிமடம் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப் படுத்தினர்.

SCROLL FOR NEXT