தமிழகம்

விண்ணப்பக் கட்டணத்தால் அரசு கல்லூரிகளில் சில்லறை சிக்கல்

க.ராதாகிருஷ்ணன்

அரசு கலைக்கல்லூரி விண்ணப்ப விலை ரூ.27 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், சில்லறை பிரச்சினையால் விண்ணப் பம் விற்பனை செய்யும் இடத்தில் விற்பனையாளர் மற்றும் விண் ணப்பம் வாங்குபவர்களிடையே சிக்கல் ஏற்படுகிறது.

தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்ப விற்பனை நேற்று தொடங்கியது. கரூர் அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்ப விற்பனையை கல்லூரி முதல்வர் பாரி நேற்று தொடங்கிவைத்தார். கல்லூரி கண்காணிப்பாளர் கோவிந்தசாமி, பேராசிரியர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விண்ணப்பங்கள் பெற காலை முதலே மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரண்டிருந்தனர். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு விண்ணப்பங்கள் இலவசம். இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.27. விண்ணப்ப விற்பனை தொடங்கும்போதே விண்ணப்பம் பெறுபவர்கள் சில்லறையாக வைத்துக்கொள்ளவும், சில்லறை இல்லாதவர்கள் மாற்றிக்கொண்டு வருமாறு கல்லூரி ஊழியர்கள் அறிவுறுத்தினர்.

சில்லறை வைத்திருந்தவர்கள் சரியான கட்டணம் கொடுத்து விண்ணப்பத்தை பெற்றனர். சில்லறை இல்லாதவர்கள், கடைகளில் சில்லறை கிடைக்கா தவர்களுக்கு ரூ.3 சில்லறை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. காத்திருந்து சில்லறையைப் பெற்றுச் செல்ல வேண்டியதாயிற்று.

இதுகுறித்து விசாரித்தபோது, விண்ணப்பக் கட்டணம் ரூ.25 என்றும், பதிவுக் கட்டணம் ரூ.2 என்றும் நிர்ணயம் செய்யப்பட் டுள்ளதால் விண்ணப்பம் ரூ.27-க்கு விற்பனை செய்யப் படுகிறது. சில்லறை கையிருப்பு வைத்துள்ளதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை” என்றனர்.

கரூர் அரசு கலைக்கல்லூரியில் 1,260 இடங்கள் உள்ளன. முதல் நாளான நேற்று பொதுப்பிரிவில் 171 விண்ணப்பங்களும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவில் 31 என 202 விண்ணப்பங்கள் விற்பனையாகின.

SCROLL FOR NEXT