திமுக, அதிமுகவின் இலவசங்கள் அறிவிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையமே இறுதி நடவடிக்கை எடுக்கும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
திமுக தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 10-ம் தேதி அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட் டார். அதேபோல அதிமுக தேர்தல் அறிக்கையை, மே 5-ம் தேதி பெருந்துறையில் நடந்த கூட்டத் தில் முதல்வர் ஜெயலலிதா வெளி யிட்டார்.
அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில், மக்களுக்கு இலவச கைபேசி வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இதுதவிர அதிமுக தேர்தல் அறிக்கையில் பல இலவச திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவ சகாயம், கடந்த 11-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தார். அதில், தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், அத்திட்டங் களுக்கான நிதி ஆதாரங்களை விளக்கியிருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, தேர்தல் அறிக்கை தொடர்பான நடத்தை விதிகளை குறிப்பிட்டு, அதற்கான விளக்கம் கேட்டு அதி முக, திமுக கட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு இ-மெயில் மூலம் நேற்று விளக்கம் அனுப்பி வைக்கப்பட்டது. திமுக தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, ‘‘அதிமுக, திமுக அளிக்கும் விளக் கங்களை தேர்தல் ஆணையத் துக்கு அனுப்புவோம். இந்த விவ காரத்தில் ஆணையம்தான் இறுதி முடிவை எடுக்கும்’’ என்றார்.