தமிழகம்

திமுக ஆட்சி அமைந்ததும் 58 கிராம கால்வாய் பணி நிறைவேறும்: மதுரையில் கனிமொழி உறுதி

செய்திப்பிரிவு

தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி அமைந்ததும் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய்த் திட்டப்பணியை உடனே நிறைவேற்றுவோம் என கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த திமுக ஆட்சியில் விவசாயக் கடன் ரூ.7 ஆயிரம் கோடியை கருணாநிதி ரத்து செய்தார். ஒரு கிலோ அரிசி ரூ.1-க்கு வழங்கினார். மிக்ஸி உள்ளிட்ட இலவச பொருட்கள் வேண்டாம், எங்கள் கணவரை குடிக்காமல் வீட்டுக்கு அனுப்புங்கள் எனப் பெண்கள் கேட்கின்றனர். இதனால் மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் முதல் கையெழுத்து என்றார் கருணாநிதி. படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என ஜெயலலிதா கூறுகிறார். அவர் சொன்னபடி எதையும் செய்யமாட்டார் என்பதால் டாஸ்மாக் கடைகளை அடைக்க மாட்டார்.

திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சுழல் நிதி முறையாக ஒதுக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக நிதி ஒதுக்கப்படாததால் மகளிர் குழு செயலிழந்து விட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் மகளிர் குழுவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். முதியோர், விதவையருக்கு ரத்து செய்யப்பட்ட உதவித் தொகை மீண்டும் அளிக்கப்படும். நூறு நாள் வேலை திட்டக் கூலி உயர்த்தப்படும் என்றார்.

பின்னர் உசிலம்பட்டி அருகே நடைபெறும் 58 கிராம கால்வாய் திட்டப் பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது அவரிடம் 58 கிராம பாசன விவசாய சங்கத்தினர் தெரிவிக்கையில், 16 ஆண்டுகளாகியும் பணிகள் முடியவில்லை. ஒப்பந்ததாரரும் ஆர்வமில்லாமல் இருக்கிறார். மொத்தமாக நிதி ஒதுக்கி பணியை முடித்தால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும் என்றனர். இதற்கு கனிமொழி பதில் அளிக் கையில், திமுக ஆட்சி அமைந்ததும் முழு தொகையையும் ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றுவோம். எங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை நாங்களே நிறைவு செய்வோம் என்றார்.

அப்போது உசிலம்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் கே.இளமகிழன், மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.சித்ராசெல்வியை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று பேசியதாவது:

ஜெயலலிதா ஆட்சியில் பெண்கள் எவ்வளவோ போராடியும் எந்த மதுக் கடையையும் மூடவில்லை. திமுக ஆட்சியில் 1,300 மதுக் கடைகளை மூடினோம். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் 6,800 மதுக்கடைகளை அதிகப்படுத்தி இருக்கிறார்.

மின்கட்டணத்தை உயர்த்திவிட்டு தற்போது தேர்தலுக்காக 100 யூனிட் மின்சாரம் இலவசம் எனப் பொய் சொல்கிறார். தேர்தல் நேரத்தில் எதுஎது தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என நினைக்கக் கூடியவர் ஜெயலலிதா என்றார்.

SCROLL FOR NEXT