நேற்று மாலையில் முழு அளவில் செயல்பட்ட தூத்துக்குடி அனல்மின் நிலையம். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

காலையில் நிறுத்தம், மாலையில் இயக்கம்: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தேவைக்கு ஏற்ப மின்சாரம் உற்பத்தி

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகத்துக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மிகவும் பழமையான இந்த அனல்மின் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது. தற்போது 5 அலகுகளும் முழுமையாக சீரமைக்கப்பட்டு, முழு அளவில் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது. நிலக்கரி வருகைக்கு ஏற்ப அலகுகள் இயக்கப்பட்டு வந்தன.

பகலில் நிறுத்தம்

கடந்த சில தினங்களாக நிலக்கரிவரத்தும் சீரடைந்து, நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி அலகுகளை காலையில் நிறுத்தி வைப்பதும், மாலையில் மீண்டும் இயக்குவதும் என்ற நிலை தொடர்ந்து வருகிறது.

இந்த அனல்மின் நிலையத்தில் நேற்று காலையில் 1-வது அலகு மட்டுமே செயல்பட்டது. 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு மேல் மற்ற மின் உற்பத்திஅலகுகள் படிப்படியாக இயக்கப்பட்டன. மாலை 4 மணியளவில் 5 மின் உற்பத்தி அலகுகளும் முழுமையாக செயல்படத் தொடங்கின. மாலை 5 மணி நிலவரப்படி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டை தாண்டியிருந்தது. இரவு நேரத்தில் திறனைத் தாண்டி 1,075 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலைதான் கடந்த சில நாட்களாக தொடர்கிறது.

நிலக்கரி தட்டுப்பாடு இல்லை

இதுகுறித்து, தூத்துக்குடி அனல்மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது: நிலக்கரி வரத்து ஓரளவுக்கு சீரடைந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 30 ஆயிரம் டன் நிலக்கரி கப்பல் மூலம் வந்தது. தற்போது, 40 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேலும், 60 ஆயிரம் டன் நிலக்கரி கப்பலில் இருந்து இறக்குவதற்கு தயாராக உள்ளது. எனவே, நிலக்கரி தட்டுப்பாடு ஏதும் இல்லை.

பகல் நேரத்தில் சூரிய மின் உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே, பகலில் சில மணி நேரம் மின் உற்பத்தி அலகுகளை நிறுத்தி வைக்கிறோம். மின்சாரம் தட்டுப்பாடு வராமல் சமாளிக்கும் வகையில் தேவைக்கு ஏற்ப முழுஅளவில் மின் உற்பத்தி செய்கிறோம்.

மின் உற்பத்தி அலகுகளை அடிக்கடி நிறுத்தி இயக்குவதால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புஇல்லை. சிறிய தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டாலும், உடனுக்குடன் சரி செய்யப்படும். மேலும், மின் உற்பத்தி அலகுகளின் இயக்கத்தை தொடங்க பர்னஸ் ஆயில் பயன்படுத்தப்படுகிறது.

பர்னஸ் ஆயில் பயன்படுத்தப்படுவதால் பெரிய அளவில் செலவு இல்லை. ஒரு யூனிட்டுக்கு கூடுதலாக 20 பைசா மட்டுமே செலவாகும். இன்றைய நிலவரப்படி வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.12. ஆனால், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு யூனிட் மின் உற்பத்திக்கு ரூ.3.80 மட்டுமே செலவாகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT