சென்னை: மகா தமனி பாதிப்பால் இதயத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்த ஏழை விவசாயிக்கு, மிகவும் சாவாலான சிகிச்சை அளித்து சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
வேலூரைச் சேர்ந்த ஏழை விவசாயி கஜேந்திரன் (73). கடும் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவரது இதயத்தின் மகா தமனியின் கீழ்ப்பகுதியில் கிழிசல் ஏற்பட்டிருந்ததும், அதனால், இதயத்துக்குள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, குணமடைந்துள்ள அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகளும் இருந்தன. உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கஜேந்திரன் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணர் செசிலி மேரி மெஜல்லா தலைமையிலான குழுவினர், அவரது வலது தொடைப் பகுதியில் இரு சிறு துளையிட்டு, இடையீட்டு சிகிச்சை மூலம் மகாதமனி பகுதியில் ‘ஏடிஓ’ என்ற கருவியைப் பொருத்தி, அதன் மூலம் ரத்தக் கசிவு பாதிப்பை சரி செய்தனர்.
துறைத் தலைவர் கார்த்திகேயன், மருத்துவர்கள் மணிகண்டன், நவீன்ராஜா, மயக்கவியல் மருத்துவர்கள் டி.ஆர்.பார்த்தசாரதி, மகேஷ் ஆகியோர் சிகிச்சைக்கான உதவிகளை செய்தனர். இந்த சிகிச்சைக்குப்பின் பூரணமாக குணமடைந்த கஜேந்திரனிடம் நலம் விசாரித்த மருத்துவமனை இயக்குநர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த்குமார் ஆகியோர், முதியவரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள் குழுவினரைப் பாராட்டினர்.
உலகிலேயே முதல்முறை
இது தொடர்பாக மருத்துவர் செசிலி மேரி மெஜல்லா கூறும்போது, “விவசாயி கஜேந்திரனுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலாக இருந்தது. 73 வயது நபருக்கு இதுபோன்ற சிகிச்சை அளிப்பது உலகிலேயே இதுதான் முதல்முறையாகும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமின்றி செய்யப்பட்டுள்ள இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்ய ரூ.10 லட்சம் வரை செலவாகும். தற்போது கஜேந்திரன் மீண்டும் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார்” என்றார்.