தமிழகம்

இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது: 234 தொகுதிகளிலும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதி களிலும் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. மாலை 6 மணிக்குப் பின் யாரும் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 776 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிகபட்ச மாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேரும் குறைந்த பட்சமாக, ஆற்காடு, கூடலூர், மயிலாடுதுறையில் தலா 8 பேரும் போட்டியில் உள்ளனர்.

இத்தேர்தலில் அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 9-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கி, 12-ம் தேதி நெல்லையில் முடித்தார். இதேபோல், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் களை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரும் பிரச்சாரம் செய் தனர். தங்கள் கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பா.ஜ வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல இடங்களில் வாக்கு சேகரித்தனர்.

மே 16-ம் தேதி வாக்குப்பதிவு நடப்பதையொட்டி, தேர்தல் விதிகளின்படி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் பிறகு எந்த வகையிலும் யாரும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், இன்று காலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்களின் சூறாவளி பிரச்சாரம் நடக்கும்.

முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை கடந்த 12-ம் தேதியுடன் முடித்துவிட்டார். இந் நிலையில், 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடும் ஆர்.கே.நகர் தொகுதியில், அதிமுக எம்பிக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும், மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும் பிரச்சாரத்தை முடிக்கின்றனர். கனிமொழி திருச்சியிலும், வைகோ தூத்துக் குடியிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டி, மணலி, திருவொற்றியூர் மற்றும் வேளச்சேரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுதவிர, அன்புமணி ராம தாஸ் தான் போட்டியிடும் பென்னாகரத்திலும், காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னையிலும் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்கின்றனர்.

இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மட்டுமின்றி ஊடகங்களும் கண் காணிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணிக்கு மேல் 16-ம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரை, தேர்தல் தொடர்பான எந்த விளம்பரமும், பிரச்சாரமும் கூடாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் விதிமீறலில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகி றது.

SCROLL FOR NEXT