போலீஸ் தொப்பி அணிந்து எஸ்.ஐ., ராஜாவுடன் வலம் வந்த சிறுவன். 
தமிழகம்

வாணியம்பாடியில் 4 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய உதவி ஆய்வாளர்

செய்திப்பிரிவு

வாணியம்பாடி: காவலர் தொப்பி அணிய வேண்டும் என 4 வயது சிறுவனின் ஆசையை வாணியம்பாடி உதவி காவல் ஆய்வாளர் நிறைவேற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நகர காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாணியம்பாடியைச் சேர்ந்த முஜாக்கீர் என்பவர் ரம்ஜான் தொழுகையை முடித்து விட்டு தனது மகன் மூபஷ்ஷீர்(4) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை நிறுத்தி வாகனத்துக்கான ஆவணங்களை கேட்டனர். அப்போது, முஜாக்கீரின் மகன் மூபஷ்ஷீர் வாகன சோதனையில் ஈடுபட்ட வாணியம்பாடி நகர உதவி காவல் ஆய்வாளர் ராஜாவிடம் சென்று காவலரின் தொப்பி அணிந்து வாகனத்தில் வலம் வர ஆசையாக இருப்பதாக தனது விருப்பத்தை கூறினார்.

இதை சற்றும் எதிர்பாராத காவல் உதவி ஆய்வாளர் ராஜா தான் அணிந்திருந்த தொப்பியை கழட்டி சிறுவனின் தலையில் வைத்தார். பிறகு, சிறுவனை தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று, மீண்டும் பேருந்து நிலையத்தை அடைந்தார்.

4 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய உதவி காவல் ஆய்வாளர் ராஜாவின் இச்செயல் சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகி பொதுமக்களின் பாராட்டை பெற்றது. இதைக்கண்ட திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய உதவி காவல் ஆய்வாளர் ராஜாவை அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.

SCROLL FOR NEXT