சென்னை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, குறைத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, சமத்துவ மக்கள் கட்சி சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது வரி குறைப்பு செய்திடவும், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் 30.04.2022 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
எனவே, மத்திய, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக, இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி வாரியாக அறிவிக்கப்பட்ட விளக்கவுரை பொறுப்பாளர்களும், மண்டல அமைப்புச் செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும், ஆர்ப்பாட்டம் நடைபெறும் மாநகராட்சிக்குட்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை, வார்டு மற்றும் அணி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு, மக்கள் நலனுக்கான ஆர்ப்பாட்டம் வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.