சென்னை: பெருங்குடி குப்பைக் கிடங்கிள் தீயை அணைக்கும் பணி நாளைக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னையை அடுத்த பெருங்குடியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் குப்பை கிடங்கில் கடந்த 26 ஆம் தேதி மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென குப்பை மேடு முழுவதும் பரவியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அருகில் வசிப்பவர்கள் கண் எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பதில் அளித்த தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, "தென்னை நார் கழிவு மூலம் பெருங்குடி குப்பை கிடங்கில் தீ பற்றியுள்ளது. தீ அணைக்கும் பணி நாளைக்குள் நிறைவு பெறும். ஹைதராபாத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர். மீத்தேன் வாயு எடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே இதுபோன்று, 3 மாநகராட்சிகளிலும் மக்காத குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.பெருங்குடி பகுதியில் உள்ள குப்பைகள் முழுவதும் இன்னும் 2 ஆண்டு காலத்தில் அகற்றப்படும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.