சென்னை:சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
‘யூ டூ புரூட்டஸ்’ என்னும் யூ-டியூப் சேனலில் மைனர் விஜய் என்பவர் சிவபெருமானையும், நடராஜரின் நடனத்தையும் மோசமாகசித்தரித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது உலகெங்கும் உள்ள சிவ பக்தர்களை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. மத உணர்வை புண்படுத்தக்கூடிய வகையில், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கலவரத்தை தூண்டும் வகையில் இந்த யூ-டியூப் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
எனவே, இந்த யூ-டியூப் சேனலை உடனடியாக முடக்க வேண்டும். சிவபெருமானை மோசமாக சித்தரித்தவர்கள், இதன் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.