தூத்துக்குடி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ள தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முத்துநகர் கடற்கரை பூங்கா மக்களின் முக்கிய பொழுது போக்கு மையமாக திகழ்கிறது. தினமும் ஏராளமான மக்கள் குடும்பத்தோடு இந்த பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் இந்த பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
பூங்காவில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமலும், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், நிழற்குடை போன்றவை சேதமடைந்தும் காணப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3.25 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் தொடங்கின.
ஸ்கேட்டிங் டிராக் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. கூடைப்பந்து மைதானம், வாலிபால் மைதானம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நேரு சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
கடற்கரையில் நடைபயிற்சி செய்வதற்கு வசதியாக நடை பாதை, வெயில் மற்றும்மழையில் சுற்றுலா பயணிகள் ஒதுங்கிஇளைப்பாற கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடற்கரையில் ‘ஐ லவ் தூத்துக்குடி' என்ற வாசகத்துடன் செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நீரூற்று, கலையரங்கம், மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்று ரசிக்கும் வகையில் சாய்வுதளம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. சுவர்களில் தமிழர்களின் பாரம்பரிய கிராமப்புற விளையாட்டுகள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. மரங்கள், அழகு செடிகள் நடப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ள பூங்காவில் குடிநீர், கழிவறை போன்ற வசதிகளும்ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பூங்காவின் நுழைவு வாயிலில் தூத்துக் குடி மாநகராட்சியின் அடையாளமான 'சிப்பிக்குள் முத்து' சின்னம், கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து, இன்னும் ஒரு வாரத்தில் முத்துநகர் கடற்கரை பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.