தமிழகம்

போலீஸ் காவலில் இளைஞர் மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: போலீஸ் காவலில் இளைஞர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல்நிலையத்தில் திருவல்லிக்கேணி சுரேஷ் (28), பட்டினப்பாக்கம் விக்னேஷ் (25) ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் காலையில் விக்னேஷ் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு, உதவி ஆய்வாளர் புகழும்பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க்காவல் படையைசேர்ந்த தீபக் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தார்.விக்னேஷ் விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

இந்நிலையில், நேற்று காலை சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீஸார், இளைஞர் விக்னேஷ் மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கினர். காவல் நிலையத்துக்கு விக்னேஷ் எத்தனை மணிக்கு அழைத்து வரப்பட்டார், அப்போது, காவல் நிலையத்தில் யாரெல்லாம் பணியில் இருந்தனர், விக்னேஷக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது எந்த மாதிரியான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை சிபிசிஐடி போலீஸார் திரட்டினர்.

மேலும், தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள், விசாரணைக் கைதிகளைத் தங்க வைக்கும் அறை குறித்தும் ஆய்வு செய்தனர். விக்னேஷை முதலில் அழைத்துச் சென்ற தனியார் மருத்துவமனையிலும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். அதேபோல, விக்னேஷ் நண்பர்கள், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT