சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தண்ணீரை பீய்ச்சி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். படங்கள்: ம.பிரபு 
தமிழகம்

அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு; சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து: சிகிச்சையில் இருந்த 128 நோயாளிகள் பத்திரமாக மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் மின்கசிவால் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சிகிச்சையில் இருந்த 128 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், புறநோயாளிகளாக தினமும் தினமும் சுமார் 10 ஆயிரம் பேரும் சிகிச்சை பெறுகின்றனர். 680 மருத்துவர்கள், 1,050 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனையின் டவர்-1, டவர்-2 கட்டிடங்களுக்கு பின்புறம் பிராட்பீல்ட் சர்ஜிக்கல் பிளாக் என்ற பெயரிலான 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டிடம் உள்ளது.

தரை மற்றும் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் கூடிய இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் சேமித்து வைக்கும் குடோனும், பின்புறத்தில் சமையல் அறையும் உள்ளது. முதல் தளத்தில் நரம்பியல் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு இரண்டாம் தளத்தில் நெஞ்சக பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை 10.41 மணிக்கு தரைத் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை உபகரண அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முகக்கவசங்கள், பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் அங்கு இருந்ததால் மளமளவென தீ பரவியது.

இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 7 இடங்களிலிருந்து 17 தீயணைப்பு வாகனங்கள் வரவழைகக்கப்பட்டன. ஸ்கை லிப்ட் தீயணைப்பு வாகனமும் கொண்டு வரப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து 10 வாகனங்களில் தண்ணீர் வரவழைக்கப்பட்டது.

இதற்கிடையே தீ வேகமாகப் பரவி கரும்புகை அதிகரித்ததால் அந்தக் கட்டடத்துக்குள் நுழையவே முடியாத நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில் 4 ஆக்சிஜன் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

தீ விபத்தால் புகை மூட்டம் கிளம்பியதுடன் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து சிதறின.

அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் 33 நோயாளிகள் பக்கவாதம் மற்றும் நரம்பு சார்ந்த பாதிப்புகளுக்குள்ளாகி நடமாட இயலாத நிலையில் இருந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பக்கத்திலிருந்த முடநீக்கியல் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தின் வழியாக அழைத்துச் சென்று டவர் -3 கட்டிடத்துக்கு மாற்றப்பட்டனர். இரண்டாம் தளத்தில் இருந்த நெஞ்சக சிகிச்சை மற்றும் நரம்பியல் சிகிச்சை நோயாளிகள் 95 பேரும் புகை மூட்டத்துக்கு நடுவே வெளியேற்றப்பட்டனர்.

அதில், வெண்ட்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த 3 நோயாளிகளை ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மாற்றப்பட்டனர். நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருந்த சிலருக்கு புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல், தலைவலி, கண் எரிச்சல் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த முதுநிலை மருத்துவம் படிக்கும் 4 மருத்துவர்கள், 4 செவிலியர்கள் உட்பட 16 பேருக்கு கடுமையான தலைவலி, சுவாசத் தடை மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டாலும், தீ விபத்துக்கான முழுமையான காரணத்தை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரும் நோயாளிகளை மீட்கும் பணிக்கு உதவி செய்தனர்.

தீ விபத்து நடந்த கட்டிடத்தின் மீட்பு பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தீயணைப்புத் துறை டிஜிபி பிராஜ் கிஷோர் ரவி, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விபத்து குறித்து அறிந்து மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த நோயாளிகளின் உறவினர்கள்.

பராமரிப்பு இல்லாததால்...

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டிடங்களான தற்போது தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம், அருகில் உள்ள நரம்பியல் சிகிச்சை பிரிவு, இதய சிகிச்சை பிரிவு உள்ளிட்ட கட்டிடங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. மின்சார ஒயர்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டுள்ளன. சில இடங்களில் ஒயர்கள் மீது தண்ணீர் சொட்டுகின்றன. உனடியாக பரமாரிப்பு பணிகள் செய்ய வேண்டும். இல்லையென்றால் தீ விபத்து ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது என கடந்த ஆண்டே மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தாமதிக்காமல், அருகில் உள்ள பழைய கட்டிடங்களையும் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த கட்டிடத்தில் இருக்கும் சமையல் கூடத்தில் எரிவாயு கசிவு அதிகமாக இருக்கிறது. மழையின்போது, நரம்பியல் கட்டிட ஐசியு வார்டில் தண்ணீர் உள்ளே வருவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT