தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு தீ விபத்து சம்பவத்தை நேரில் பார்த்த அதே ஊரைச் சேர்ந்த அசோகன் (62) கூறும்போது, ‘‘தேர் கீழ வீதியிலிருந்து பிரதான சாலைக்கு அதிகாலை 3.15 மணிக்கு வந்தது. பிரதான சாலை புதிதாக அமைக்கப்பட்டிருந்ததால் சற்று உயரமாக இருந்தது.
இதனால் தேரின் சக்கரம் பிரதான சாலையில் ஏறும்போது ஒரு பக்கமாக சாய்ந்து உயரழுத்த மின்கம்பி மீது உரசி, தேரில் மின்சாரம் பாய்ந்ததுடன், தீப்பிடித்துக் கொண்டது’’ என்றார்.
எம்.சக்திவேல் கூறும்போது, ‘‘தேர் வரும்போது பக்தர்கள் தண்ணீர் தெளித்து வரவேற்றதால் தேரின் அடிப்பகுதி ஈரமாக இருந்தது.
தேரில் திடீரென மின்சாரம் பாய்ந்தபோது, அதன் அடிப்பகுதி ஈரமாக இருந்ததாலும், தேர் இழுத்து வருபவர்கள் காலணி அணியாமல் இருந்ததாலும் பலர் உயிரிழந்தனர்’’ என்றார்.
கண்ணகி கூறும்போது, ‘‘எனது வீட்டில் தான் கடைசியாக தேங்காய் உடைக்கப்பட்டது.
பின்னர் சிறிது நேரம் கழித்து பிரதான சாலைக்கு தேர் சென்றபோது நிலைதடுமாறி மின்கம்பி மீது சாய்ந்தது. இதனால், தேரில் இருந்தவர்கள் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தனர்.
அப்போது தேர் அருகே நின்ற னது கணவரும் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார். 10 நிமிடங்களில் எல்லாமே முடிந்துவிட்டது’’ என்றார்.
94 ஆண்டுகளாக...
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் சுவாமிகளுக்கு மடம் அமைத்து, அவரது உருவ படத்தை வைத்து அக்கிராம மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். அவ்வூரில் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் திருமுறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் அப்பர் சுவாமிகளின் சதய விழாவை ஊர் மக்களே ஒன்று கூடி வெகு சிறப்பாக நடத்தி வருகின்றனர். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த சதய விழா, இவ்வாண்டு 94-வது ஆண்டு சதய விழாவை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டது. தேரில் அப்பர் பெருமானில் உருவப் படத்தை வைத்து வீதியுலா நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக அப்பர் பெருமானுக்கு ஐம்பொன் சிலை வடிவமைக்கப்பட்டது. தற்போது இந்த ஐம்பொன் சிலையை தேரில் வைத்து வீதியுலா நடத்தியபோது மின் கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டபோது, ஐம்பொன் சிலை மட்டும் எவ்வித சேதமும் அடையவில்லை.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, களிமேடு கிராமத்துக்குச் சென்று, விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘நடக்கக்கூடாத சம்பவம் நடந்து விட்டது. இதை அரசியலாக்க வேண்டாம். இந்த சம்பவத்தை மிகப்பெரிய இழப்பாக நாங்கள் பார்க்கிறோம்’’ என்றார். பின்னர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தேரோட்டத்துக்கு அனுமதி பெறவில்லை: தீயணைப்புத் துறை
தஞ்சாவூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் (பொறுப்பு) பானுப்பிரியா தேர் விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: களிமேடு தேர் வீதியுலா குறித்து, விழாக்குழுவினர் எந்த அனுமதியும் தீயணைப்புத்துறையிடம் பெறவில்லை.
குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் தேரின் மேல் பகுதி, மின்கம்பி இருக்கும் பகுதியை கடக்கும் போது, தேரை இழுத்தவர்கள் கவனமாக இருத்திருக்க வேண்டும். ஆனால், தேர் குறுகிய சாலையில் இருந்து பிரதான சாலைக்கு திரும்பிய போது, தேருக்கு பின்னால் சென்ற தள்ளுவண்டியில் இழுத்து செல்லப்பட்ட ஜெனரேட்டரில் பழுதாகி புகை ஏற்பட்டது. இச்சமயத்தில் தேரின் மேல் பகுதி உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்துள்ளது. சாலையில் தண்ணீர் தேங்கி இருந்ததால் அருகில் இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது என்றார்.