புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி | கோப்புப் படம். 
தமிழகம்

"புதுச்சேரியில் பொம்மை ஆட்சி... நடத்துபவர் ஆளுநர்" - நாராயணசாமி சாடல்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: "புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெறுகிறது. பொம்மலாட்டத்தை நடத்துபவர் ஆளுநர்தான்" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.

புதுச்சேரியில் ஊசுடு தொகுதியில் இன்று நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியது: "காங்கிரஸில் கடந்த 2016-ல் சிலருக்கு சீட் கொடுத்து, 5 ஆண்டுகள் பதவியை அனுபவித்துவிட்டு. கட்சிக்கு துரோகம் செய்து சென்றோர் நடுத்தெருவில்தான் நிற்கவேண்டும். முதல்வர் கனவில் சென்றவர் தொப்பி போட்டு சுற்றுகிறார். எம்பி கனவில் சென்றவர் ஏமாந்து போயுள்ளார். முதல்வர் அலுவலகத்தில் அமரக்கூட வைப்பதில்லை. நிற்க வைக்கிறார். தமிழை மறந்து இந்தியில் கட்அவுட், தொப்பி அணிந்து தரமற்ற அரசியல் செய்கிறார்கள்.

வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ என்ற மூன்று மந்திரங்களை வைத்துக்கொண்டு தரமற்ற அரசியலை செய்கிறார் மோடி. என்னையும் மிரட்டி பார்த்தார்கள். பாஜகவுக்கு பயப்படுபவன் நான் இல்லை. இறக்கும் வரை காங்கிரஸ் தொண்டர்தான். பின்னால் அழுக்கு மூட்டை வைத்துள்ளோர் பயப்படலாம். காங்கிரஸ் ஆட்சியில் 4 ஆண்டுகள் 10 மாதங்கள் பதவியில் இருந்து விட்டு அங்கு ஓடி என்ன கிடைத்தது. ஆட்சியமைத்து ஓராண்டு ஆகிறது. அதிகப்படியாக மத்திய அரசிடம் இருந்து ஒரு ரூபாய் வாங்கி இருக்கிறார்களா?

காங்கிரஸ் ஆட்சியில் பத்து சதவீதம் கூடுதலாக நிதி வாங்கினோம். தற்போது எதுவும் நடக்கவில்லை. புதுச்சேரி வந்த அமித் ஷா என்ன புதிய திட்டம் அறிவித்தார்? காங்கிரஸ் ஆட்சியில் ஒப்புதல் கொடுத்த திட்டங்களையும், கிரண்பேடி நிறுத்தி வைத்த கோப்புகளை தூசி தட்டி கையெழுத்து போடுகிறார்கள். பொம்மை ஆட்சி நடக்கிறது. பொம்மலாட்டத்தை ஆளுநர் நடத்த அதில் இங்குள்ளோர் பொம்மையாக ஆடுகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT