மின் விபத்தில் சிக்கிய தேர் 
தமிழகம்

தஞ்சாவூர் மின் விபத்து குறித்து புலன் விசாரணை: மத்திய மண்டல ஐ.ஜி. தகவல்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் களிமேடு தேர்த் திருவிழாவின் போது ஏற்பட்ட மின் விபத்து குறித்து வழக்குப் பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழா தேர் திருவிழாவில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய மண்டல ஐஜி வி.பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “களிமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சப்பர இழுப்புத் திருவிழா நடைபெற்றது. அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் பாதையில் சப்பரத்தின் உச்சிப்பகுதி உரசியது. இது எப்படி உரசியது என்பது விசாரணையில் தெரிய வரும். இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் நிகழ்விடத்திலும், 8 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இறந்தனர். மேலும் காயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து எப்படி நடந்தது என வழக்குப்பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும். குறைந்த மின் அழுத்த பாதை ஏற்கெனவே அணைக்கப்பட்டிருந்தது. உயர் மின்னழுத்த பாதை மூலம் விபத்து ஏற்பட்டிருக்கிறது" என்றார்

SCROLL FOR NEXT