தமிழகம்

நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ரயில்வே பணியிடங்களை ரத்து செய்ய கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, ரயில்வே துறையில் பணியிடங்களை ரத்து செய்யக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டின் அனைத்து மண்டலரயில்வே பொது மேலாளர்களுக்கும் இந்திய ரயில்வே வாரியத் தலைவர் வினய்குமார் திரிபாதி கடந்த ஏப்.18-ம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘ரயில்வே துறையில் தட்டச்சர், சுகாதார உதவியாளர், தச்சர், பெயின்டர், உதவியாளர், உதவி சமையலர், தோட்டக்காரர், பராமரிப்பாளர், உணவு விற்பனையாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அனைத்தும் முக்கியமற்றவை. எனவே, அதை உடனே ரத்து செய்து, அப்பணியில் உள்ளவர்களை வேறு பணிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

‘பணியிட மாற்றம் செய்யப்படும் அனைவருக்கும் அவர்கள் ஏற்கெனவே பெற்று வந்த அதே ஊதியம் வழங்கப்படும். பணி பாதுகாப்பு வழங்கப்படும்’ என்றும் இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. அதனால், யாரும் உடனே வேலை இழக்கமாட்டார்கள்.

ஆனால், பல ஆயிரம் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என்பதால், ரயில்வே துறையில் எதிர்கால வேலைவாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் குறையும். இது இளைஞர்களை பாதிக்கும்.

தவிர, ரயில்வேயின் மொத்த வருமானத்தில் 67 சதவீதம் ஊதியம், ஓய்வூதியத்துக்கே செலவிடப்படுவதாகவும், செலவை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதை ஏற்க முடியாது.

எனவே, அந்த முடிவை கைவிட்டு, ரயில்வே துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT