தமிழகம்

எண்ணெய் கிணறுகள் விவகாரத்தில் விசிக நிலையில் மாற்றம்: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அதிர்ச்சி

வீ.தமிழன்பன்

காரைக்கால்: எண்ணெய் கிணறுகள் அமைப்பதுதொடர்பான ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்துக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அதிர்ச்சி தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி காவிரிப்படுகை நிறுவனத்தின் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலச்சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காரைக்காலில் அண்மையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, விழா தொடங்குவதற்கு முன்பு, நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவன வளாகத்தில் அந்த சங்கத்தைச் சேர்ந்த ஓஎன்ஜிசி அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். அப்போது, நிறுவனத்தின் செயல்பாடுகள், களத்தில் சந்திக்கும் இடர்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அவரிடம் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர்.

அதன் பின்பு, விழாவில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசும்போது, ‘‘விழா தொடங்கும் முன்பு என்னை சந்தித்த ஓஎன்ஜிசி அதிகாரிகள், எண்ணெய் கிணறுகள் விவகாரத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பொதுமக்களிடையே பரப்பக்கூடிய கருத்துகள் அறிவியல் பூர்வமானதாக இல்லை எனவும், நிறுவனம் இங்கு தொடர்ந்து இயங்க முடியாத வகையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை எனவும், தொழில்நுட்ப காரணங்களால் தற்போது செயல்படாமல் உள்ள 60 எண்ணெய்க் கிணறுகளையாவது இயக்க, அறிவியல் பூர்வமாக மக்களிடம் எடுத்துக் கூறி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் என்னிடம் கேட்டுக் கொண்டனர்.

அவர்களது கோரிக்கையின் நியாயத்தை உணர முடிகிறது. இதுகுறித்து களத்தில் போராடும் அமைப்புகளின் தலைவர்களிடம் விளக்கிக் கூறும் முயற்சியை அலுவலர்கள் முன்னெடுத்தால், ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

அவரின் இந்தக் கருத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்ற அமைப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் கூறியதாவது: திருமாவளவனின் இந்தக் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு என்ன சொல்லப்பட்டது என்று தெரியவில்லை.

எண்ணெய் எரிவாயு திட்டத்தால் காவிரிப்படுகை பாழாகிப் போனது என்பது நிபுணர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை. தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்திலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான 7 பேர் கொண்ட உயர்மட்ட ஆய்வுக்குழு அறிக்கையிலும் இதன் பாதிப்புகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமாவளவன் மிகவும் பொறுப்புள்ள தலைவர். காவிரிப் படுகையை பாதுகாக்கும் கடமை அவருக்கும் உண்டு. அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக அறிவியல்பூர்வமான விளக்கத்தையும் அவருக்கு தெரிவிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: ஒரு சில பணியாளர்களுக்காக ஒட்டுமொத்த டெல்டாவும் அழிவதற்கு எந்த அரசியல் கட்சியும் அனுமதிக்கக் கூடாது. காவிரி டெல்டா 2 ஆண்டுகளாக அமைதிப் பூங்காவாக உள்ளது. அதனை சீர்குலைக்க வேண்டாம் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்றார்.

SCROLL FOR NEXT