சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 1,460 படுக்கைகள் உள்ளன. மேலும், நிமிடத்துக்கு 2,200 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதிகளுடன் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளது என மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் மாதத்தில் கரோனா தொற்றின் 4-வது அலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை கரோனா சிகிச்சைக்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வசதிகள் தேவையான வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது: சேலம் அரசு மருத்துவமனையில் மொத்தம்1,460 படுக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் ஆக்சிஜன் வசதி கொண்டவை. கரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சை அளிக்க முடியும். தற்போது, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிகிச்சையில் இல்லை. எனினும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேவைப்படும்பட்சத்தில் படுக்கைகளை அதிகரித்துக் கொள்ள முடியும். சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இருப்பதால், சிகிச்சைக்கான குழுவையும் உடனடியாக ஏற்படுத்த முடியும்.
மருத்துவமனையில் ஆக்சிஜனை இருப்பு வைத்துக் கொள்ள 35 ஆயிரம் கிலோ லிட்டர், 13 ஆயிரம் கிலோ லிட்டர், 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 கலன்கள் (டேங்குகள்) உள்ளன. மேலும், தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் நிமிடத்துக்கு 2 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு அலகு மற்றும் நிமிடத்துக்கு 200 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய மற்றொரு அலகும் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.