சென்னை: மழைநீர் வடிகால்களில் முறையற்ற கழிவுநீர் இணைப்புகளை கண்டு பிடித்து அகற்ற சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் 2,071 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் உள்ளது. மாநகரில் உள்ள 17 லட்சம் குடியிருப்புகளில் சில வீடுகள், வணிக வளாகம் மற்றும் உணவு விடுதிகள் கழிவுநீர் இணைப்புபெறாமல் முறையற்ற வகையில் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்புகளை இணைத்துள்ளனர்.
இதனால், மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் மழைநீர் செல்வது பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதையடுத்து மழைநீர் வடிகால்களில் ஏதேனும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளதா என்பதை கண்காணித்து அதை உடனே அகற்ற மாநகராட்சி உதவி / இளநிலைப் பொறியாளர்கள், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் மற்றும் சாலைப் பணியாளர்கள் கொண்ட குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
அபராதம் விதிக்கப்படும்
இந்தக்குழு தங்களது வார்டுகளில் தினமும் ஒரு மணி நேரம் மழைநீர் வடிகால்களில் ஏதேனும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டு, முறையற்ற கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்து உடனே அகற்ற வேண்டும். மேலும், களஆய்வில் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பு கண்டறியப்பட்டால் சாதாரண கட்டிட குடியிருப்புக்கு ரூ.5,000, வணிக வளாகத்துக்கு ரூ.10,000, சிறப்பு கட்டிட குடியிருப்புக்கு ரூ.25,000, வணிக வளாகத்துக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
இதேபோல், அடுக்குமாடி கட்டிட குடியிருப்புக்கு ரூ.1 லட்சமும், வணிக வளாகத்துக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். மேலும், இக்குழுவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முறையற்ற கழிவுநீர் இணைப்புகள் அடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.