ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீராமானுஜரின் 1005-வது ஆண்டு திரு அவதார உற்சவம் பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யக்கார சுவாமி திருக்கோயிலில் நேற்று தொடங்கியது. இதையடுத்து உற்சவத்தின் முதல் நாளில் தங்கப் பல்லக்கில் ராமானுஜர் திருவீதி உலா நடைபெற்றது.
தொன்மை வாய்ந்த ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யக்கார சுவாமி திருக்கோயில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைஷ்ணவ ஆசாரியரான ஸ்ரீராமானுஜர் தானுகந்த திருமேனியாகக் காட்சியளித்து வருகிறார்.
இக்கோயிலில் ராமானுஜரின் 1005-வது திரு அவதாரத் திருவிழா மற்றும் ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. 10 நாள்களுக்கு நடைபெற உள்ள ராமானுஜரின் அவதாரத் திருவிழாவின் முதல் நாளில் காலை மஞ்சத்திலிருந்து சுவாமி புறப்படுதல், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதையடுத்து தங்கப் பல்லக்கில் ராமானுஜர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தங்கப் பல்லக்கில் உலா வந்து ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர். அவதார உற்சவத்தின் 9-ம் நாளான வரும் மே 4-ம் தேதி தேர்த் திருவிழாவும், மே 6-ம் தேதி கந்தப்பொடி வசந்தம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.