தமிழகம்

மின்சார ரயிலின் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை இயக்கியதே விபத்துக்கு காரணம்: முதல்கட்ட விசாரணையில் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நேரிட்ட மின்சார ரயில் விபத்துக்கு, ஓட்டுநர் பிரேக்பிடிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டரை இயக்கியதே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை கடற்கரை ரயில்நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயிலை ஓட்டுநர் பவித்ரன் இயக்கினார். முதலாவது நடைமேடைக்கு வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ரயில், நடைமேடையின் மீது ஏறி, எதிரே இருந்த கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏற்படவில்லை. எனினும், இரண்டு பெட்டிகள் சேதமடைந்தன.

விபத்து தொடர்பாக கடற்கரை ரயில்நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது ரயில்வே போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை தெற்கு ரயில்வே பாதுகாப்புப் பிரிவு அமைத்தது.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநர் பவித்ரன் ரயிலை முதலாவது நடைமேடையில் ஓட்டி வரும்போது பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக, தவறுதலாக ஆக்சிலேட்டரை இயக்கியதும், அதனால் ரயில் வேகமாக சென்று மோதி விபத்துக்கு உள்ளானதும் தெரியவந்துள்ளது.

எனினும், அந்த சமயத்தில் ஓட்டுநர் மது அருந்தி இருந்தாரா அல்லது செல்போனில் பேசியபடி ரயிலை இயக்கினாரா என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT