மதுரை: முன்னீர்பள்ளம் கிராமத்தை ஜாதி படுகொலை நடக்கும் பகுதியாக அறிவிக்கக் கோரிய வழக்கில், நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும்மாவட்ட எஸ்பி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த உசேய்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவந்த என் மகனை 25.2.2019-ல் பலர் கொலை செய்தனர். என் மகனை கொலை செய்தவர்கள் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இவர்களால் பாதிக்கப்பட்ட அனைவரும் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள்.
குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்து தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.முன்னீர்பள்ளம் கிராமத்தில் பட்டியலின மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.
இதனால் பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், 2015-ன் கீழ் அடிக்கடி ஜாதி கொலைகள் நடக்கும் பகுதியாக முன்னீர்பள்ளம் கிராமத்தை அறிவித்து, குற்றவாளிகளை கைது செய்து கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.மனு தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 28-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.