தமிழகம்

பண பலத்தை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வி: அன்புமணி

செய்திப்பிரிவு

தேர்தலில் பண பலத்தை தடுப்பதில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், பிற தேர்தல் அதிகாரிகளும் தோல்வியடைந்து விட்டனர் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''2016 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் பணத்தை பாதாளம் வரை பாயவிட்டுக் கொண்டிருக்கின்றன. இதை தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதுடன், பல இடங்களில் பண விநியோகத்திற்கு துணையாக இருக்கின்றனர். ஜனநாயகத்தை மதிக்காமல் பணநாயகத்திற்கு துணை போகும் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுகவும், அதிமுகவும் போட்டிபோட்டுக் கொண்டு ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். குறைந்தபட்சமாக திமுக ரூ.500, அதிமுக ரூ.1000 என பணம் விநியோகிக்கிறது. முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இன்னும் பல மடங்கு அதிகமாக பணம் வழங்கப்படுகிறது.

ஜோலார்பேட்டை தொகுதியில் ரூ.2000, எடப்பாடியில் ரூ.3000 வீதம் அதிமுகவினர் பணத்தை வாரி இறைக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரிலும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியிலும் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் ஒரு ஓட்டுக்கு ரூ.5000 வீதம் விநியோகித்து வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டு பணம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 70 தொகுதிகளில் பண விநியோகம் முடிவடைந்து விட்டது. ஆனால், பண விநியோகத்தில் ஈடுபடும் திமுக, அதிமுக ஆகிய கட்சியினர் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய செயல்களால் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத தன்மையும், ஒரு சார்பு நிலைப்பாடும் அம்பலமாகி விட்டன.

தமிழகத்தில் எந்தப் பகுதியில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்பட்டாலும் அதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியிருக்கிறார்.

ஆனால், பண விநியோகம் பற்றி எந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் ஒரு மணி நேரம் கழித்து தான் பறக்கும் படை வருகிறது. அதற்குள் பண விநியோகத்தை முடித்து விடுகின்றனர். பண விநியோகம் குறித்து புகார் வந்தால் தாமதமாகத் தான் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினருக்கு மேலிடத்திலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தலை நேர்மையாகவும், தூய்மையாகவும் நடத்த வேண்டிய அதிகாரிகளே பண விநியோகம் செய்பவர்களுக்கு துணையாக செயல்படுகின்றனர். பென்னாகரம் தொகுதி ஏரியூரில் பண விநியோகம் செய்த அதிமுகவினரை பாமகவினர் பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கடலூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.சி.சம்பத் சார்பில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் விநியோகித்து வந்த பணத்தை அத்தொகுதி பாமக வேட்பாளர் பழ. தாமரைக்கண்ணனும், அவருடன் வந்தவர்களும் பறிமுதல் செய்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்த போதும், பணத்தை விநியோகித்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அதை தடுத்த பாமக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தேர்தல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக உள்ளன.

அதிமுகவுக்கு இணையாக திமுகவும் பணம் விநியோகித்து வரும் நிலையில், பண விநியோகத்தை தடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுப்பது நாடகம் ஆகும். தேர்தலில் பண பலத்தை தடுப்பதில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், பிற தேர்தல் அதிகாரிகளும் தோல்வியடைந்து விட்டனர். தமிழக தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் விரும்பினாலும், தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளாக இருப்பவர்கள் அதிமுகவின் தொண்டர்களைப் போலவே செயல்படுகின்றனர்.

கோவை தெற்கு தொகுதி தேர்தல் அதிகாரி காந்திமதி, தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி மதுராந்தகி ஆகியோர் தங்கள் வாகனத்திலேயே பணம் கொண்டு செல்லப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதிலிருந்தே தமிழகத்தின் கள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.

அதிமுகவும், திமுகவும் தோல்வி பயம் காரணமாகவே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன. பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற அதிமுக, திமுகவின் கனவு பலிக்காது. இந்த இருகட்சிகளையும் புறக்கணித்து விட்டு பாமகவுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இனியாவது பண விநியோகத்தை தடுக்க வேண்டும். தமிழகத்தின் எந்த பகுதியில் பண விநியோகம் நடந்தாலும், அதற்கு அப்பகுதியின் தேர்தல் அதிகாரியும், காவல்துறை அதிகாரிகளும் தான் பொறுப்பு என்றும், அவர்களை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையம் எச்சரிக்க வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT