குடியாத்தம்: கே.வி.குப்பம் அருகே பிளஸ் 2 மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் குழுவினர் தடுத்து நிறுத்தினர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத மாணவிக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன.
பிளஸ் 2 படித்து வரும் மாணவியை கட்டாயப்படுத்தி கொட்டாளம் கிராமத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடுகள் நடந்துள்ளன.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட சைல்டு லைன் பிரிவுக்கு புகார் வரப்பெற்றது. அதன்பேரில் சைல்டு லைன் ஊழியர்கள், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய ஊழியர்கள், பனமடங்கி காவல் துறையினர் அந்த கிராமத்துக்கு நேற்று முன்தினம் மாலை விரைந்து சென்று விசாரித்தனர். அதில், பிளஸ் 2 படித்து வரும் மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவியை மீட்ட அதிகாரிகள், ராணிப்பேட்டையில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர். மேலும், மாணவிக்கு 18 வயது நிரம்பிய பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோரிடம் உறுதிமொழி பெற்றுக் கொண்டனர்.