ஆம்பூர்: புத்தம் புதிய மின்சார வாகனம் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்றதால் மனஉளைச்சலுக்கு ஆளான மருத்துவர் ஒருவர் தனது மின்சார வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்த சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த இயன்முறை மருத்துவர் பிரித்திவிராஜ் கோபிநாத். இவர், கடந்த ஜனவரி மாதம் ஓலா மின்சார வாகனத்தை ரூ.1.40 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். அடிக்கடி பழுதாகி யுள்ளது. இதனால், 2 முறை வாகன குறைகளை வாகன நிறுவனத்தினர் சரி செய்த பிறகும் அதே பிரச்சினை தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த வாகனம் மேல்பட்டி அடுத்துள்ள குருநாதபுரம் கிராமம் அருகே சென்றபோது நடுவழியில் நின்று விட்டது.
வழக்கம்போல், வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டபோது சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள் என கூறியுள்ளனர். ஆனால், 5 மணி நேரம் ஆகியும் அதே பதிலை கூறியுள்ளனர். ஆனால், யாரும் வரவில்லை.
மருத்துவர் பிரித்திவிராஜ் அருகே இருந்த பெட்ரோல் நிலையத்துக்குச் சென்று ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்தவர் சாலையோரம் நிறுத்தப்பட்ட அந்த மின்சார வாகனத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததுடன் அந்த காட்சிகளை செல்போன் வீடியோவில் பதிவு செய்து தனது மனக்குமுறலை பதிவு செய்திருந்தார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவின. இதுகுறித்து மேல்பட்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த மருத்துவர் பிரித்திவிராஜ் கோபிநாதன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘இந்த வாகனத்தை வாங்கிய நாளில் இருந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினேன். என்னுடைய வாகனத்தின் குறையை அவர்கள் கடைசிவரை சரி செய்யவே இல்லை. ஒரு கட்டத்தில் நான் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொறுமையை இழந்ததால்...
ஏற்கெனவே, இரண்டு முறை வாகனத்தின் சார்ஜ் இல்லாமல் நடுவழியில் நின்று வந்திருக்கிறேன். இன்றும் அதே நிலை இருந்தது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்ததால் வேறு வழியில்லாமல் வாகனத்தை தீயிட்டு எரித்தேன். இந்த காட்சிகள் டிவிக்களில் ஒளிபரப்பானதால் நிறுவனத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இதுகுறித்து வெளியில் யாரிடமும் பேச வேண்டாம் என்றும், புதிய வாகனத்தை கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், அந்த வாகனத்தை வாங்கி மீண்டும் பயன்படுத்தக்கூடிய மன நிலையில் நான் இல்லை என கூறி அவர்களின் இணைப்பை துண்டித்துவிட்டேன்’’ என்றார்.
இரண்டு முறை வாகனத்தின் சார்ஜ் இல்லாமல் நடுவழியில் நின்று வந்திருக்கிறேன். இன்றும் அதே நிலை இருந்தது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்ததால் வேறு வழியில்லாமல் வாகனத்தை தீயிட்டு எரித்தேன்.