இலங்கை தமிழ் மக்களுக்கான பணிகள் என்றும் தொடரும் என்று இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
13-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற திமுக தலைவர் கருணாநிதிக்கு இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை நேற்று அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்பும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி, சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதத்தில், ''தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், 13-வது முறையாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டது குறித்தும் அன்போடும், பாசத்தோடும் நீங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். இலங்கை வாழ் தமிழ் மக்கள் சார்பில் தாங்கள் தெரிவித்துள்ள வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வு பெறுவதற்கு என்னுடைய பங்களிப்பு தொடர வேண்டுமென்று உங்கள் கடிதத்தில் எழுதியிருந்தீர்கள். 1956-ம் ஆண்டிலிருந்து தொடங்கிய அந்தப்பணி நீங்கள் விரும்பியது போல என்றைக்கும் தொடரும் என்ற உறுதியினை உங்களுக்கும், இலங்கைத் தமிழ் மக்களுக்கும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.