தமிழகம்

நிச்சயதார்த்தம் செய்து விட்டோம்; திருமணத்தை நடத்தி வையுங்கள்: பேரவையில் விவாதம் 

செய்திப்பிரிவு

சென்னை: செவிலியர் கல்லூரி வேண்டும் என்று கேட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ, நாங்கள் நிச்சயதார்த்தம் செய்து விடடோம், நீங்கள் திருமணத்தை நடத்தி வையுங்கள் என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது கோவில்பட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ மற்றும் மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடையே நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:

கடம்பூர் ராஜூ: கோவில்பட்டி தொகுதியில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்கப்படுமா?

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் செவிலியர் பயிற்சி கல்லூரி உள்ளது. கோவில்பட்டியில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க நில மாற்றம் தொடர்பான பணிகள் 2020ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அதன்பிறகு 2 ஆண்டுகளாக எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. வருகிற நிதியாண்டில் இதை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கடம்பூர் ராஜு: நில மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு, நிதி ஒப்புதலுக்கு அளிக்கப்பட்ட நேரத்தில் தேர்தல் வந்த காரணத்தால் அது நிலுவையில் உள்ளது. அந்த பணியை அரசு விரைவாகச் செய்ய வேண்டும்.

அமைச்சர் மா.சுப்பிமரணியன்: 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நில மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. இருந்தாலும் கல்லூரி அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடம்பூர் ராஜு: அனைத்து நிலைகளிலும் பணிகள் நடைபெற்ற நிலையில் அந்த பகுதி மக்களின் எண்ணம் என்ற சொன்னால், நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டது. திருமணம் மட்டும்தான் நடைபெற வேண்டியதுதான் பாக்கி. இந்த திருணமத்தை நடத்தி தர வேண்டும். செவிலியர் பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: நில மாற்றம் மட்டும்தான் நடைபெற்றுள்ளது.

பேரவைத் தலைவர்: பெண் மட்டுதான் பார்த்துள்ளார்கள்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: பெண் பார்க்கின்ற நிலையில்தான் உள்ளது. இருந்தாலும் இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நடத்தி வைக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT